இன்றைய காலகட்டத்தில் பலர், “இன்றைய ஆராதனை எனக்குப் பிடித்திருந்தது” அல்லது “ஆராதனை நன்றாக இல்லை” என்று சொல்கிறார்கள். இவை சாதாரண விஷயங்களாகத் தோன்றலாம், ஆனால் இவை ஆராதனையைப் பற்றிய நமது புரிதலில் ஒரு தவறைச் சுட்டிக் காட்டுகின்றன. நாம் இவற்றைச் சொல்லும்போது, தேவனை நாம் ஆராதிப்பதை விட, நம்மைப் பற்றி-நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப் பற்றி-அதிக அக்கறை காட்டுகிறோம் என்பதைக் காட்டுகிறது. இதை வேதாகமம் போதிப்பதில்லை. தேவனை மையமாகக் கொண்ட ஒரு ஆரோக்கியமான ஆராதனை கண்ணோட்டத்திற்கு நாம் திரும்பிச் செல்ல வேண்டும்.
ஆராதனை நம்மைப் பற்றியது அல்ல
ஆராதனை என்பது ஒரு கலைநிகழ்ச்சி அல்ல. இது நம்மை மகிழ்விக்கவோ அல்லது ஒரு குறிப்பிட்ட வழியில் உணர வைப்பதற்காகவோ அல்ல. யாராவது, “எனக்கு ஆராதனையைப் பிடித்திருந்தது” என்று கூறும்போது, அவர்கள் ஆராதனையின் அதிபதி போல் தோன்றுகிறார்கள். ஆனால் உண்மையில், ஆராதனை என்பது தேவனுக்கானது. உயர்த்தப்படவும், மகிமைப்படுத்தப்படவும், நம் பணிந்து கீழ்ப்படியவும் பாத்திரர் அவர் மட்டுமே. ரோமர் 12:1 ல் பவுல், “நீங்கள் உங்கள் சரீரங்களை . . . ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, . . . வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை” என்று கூறுகிறார். ஆராதனை என்பது நம்மை கடவுளுக்கு அர்ப்பணிப்பதாகும். இது நமக்கு என்ன கிடைக்கிறது என்பது பற்றியது அல்ல, ஆனால் நாம் அவருக்கு என்ன கொடுக்கிறோம் என்பது பற்றியது.
ஏசாயா 6-ல், ஏசாயா தீர்க்கதரிசி தேவனை அவரது மகிமையில் கண்டார். “என்ன அருமையான காட்சி!” என்று அவர் கூறவில்லை. மாறாக, “ஐயோ! அதமானேன்!” என்று கத்தினார். அவர் தேவனின் பரிசுத்தத்தைக் கண்டு, பணிவுடனும் மனந்திரும்புதலுடனும் பதிலளித்தார். அதுவே உண்மையான ஆராதனை.
தேவன் உண்மையில் யார் என்பதை நாம் காணும்போது – அவரது அன்பு, பரிசுத்தம், வல்லமை மற்றும் கருணை போன்றவற்றை நாம் உணரும்போது, ஆராதனை தொடங்குகிறது. தேவனை நாம் தெளிவாகக் காணும்போது, நம்முடைய இருதயங்கள் அதற்கேற்ப பதிலளிக்கின்றன. நாம் அவரைப் போற்றுகிறோம். நாம் அவரை வணங்குகிறோம். நாங்கள் அவரை நேசிக்கிறோம். நாங்கள் அவரை நம்புகிறோம். இது ஆராதனை.
ஜான் பைப்பர் இதை நன்கு விளக்குகிறார். ஆராதனை என்பது ஒரு மனிதன் ஒரு அழகான சூரிய உதயத்தைப் பார்த்து, “வாவ்!” என்று சொல்வது போன்றது. அந்த “வாவ்” கட்டாயப்படுத்தப்படவில்லை. அது இயற்கையாகவே வருகிறது. அதேபோல், தேவன் எவ்வளவு பெரியவர் என்பதை நாம் உண்மையிலேயே பார்க்கும்போது, நமது இதயங்கள் மகிழ்ச்சியுடனும் புகழ்ச்சியுடனும் சரணடைந்து பதிலளிக்கின்றன. இது ஆராதனை.
யோவான் 4:23-24 ல், உண்மை ஆராதனை “ஆவியோடும் உண்மையோடும்” ஏறேடுக்கப்படவேண்டும் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கற்றுத் தருகிறார். இதன் அர்த்தம் என்னவென்றால், நாம் நம்முடைய உணர்வுகளுடன் (ஆவியோடும்) சரியான புரிதலோடும் (சத்தியத்தோடும்) ஆராதிக்க வேண்டும் என்பதாகும். ஆராதனை என்பது வெறும் உணர்ச்சி அல்ல. வெறுமனே சிந்திப்பது மட்டுமல்ல. இரண்டும் உள்ளடங்கும். நாம் தேவனைப் பற்றிய சத்தியத்தை காண்கிறோம், பின்னர் நமது முழு ஆத்துமாவோடு பதிலளிக்கிறோம்.
ஆக, ஆராதனை என்பது தேவனைப் பற்றிய சத்தியங்களை, தேவனின் குணாதிசயங்களை நாம் கண்டு, பின்னர் நமது எண்ணங்கள், உணர்வுகள், தீர்மானங்கள் மற்றும் செயல்கள் மூலமாக பதிலளிப்பதாகும்.
ஆராதனையில் உணர்வுகளுக்கு என்ன பங்கு?
மேலே நாம் கண்டவைகள் ஒரு முக்கியமான கேள்விக்கு வழிவகுக்கிறது. ஆராதனை உணர்வுகளை உள்ளடக்கியிருந்தால், “இன்றைய ஆராதனை எனக்குப் பிடித்திருந்தது” என்று ஏன் சொல்ல முடியாது?
பதில் இதுதான்:
ஆராதனையில் உணர்வுபூர்வமாக ஈடுபடுவது நல்லது. சங்கீதங்கள் உணர்ச்சிகளால் நிறைந்துள்ளன. ஆனால் அந்த உணர்ச்சிகள் கடவுளின் மகத்துவத்தைப் பார்ப்பதிலிருந்து வருகின்றன. “ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை சிறந்தது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்” என்று சங்கீதம் 63:3 கூறுகிறது.
வேதாகமத்தில் நாம் காணும் ஆராதனை பெரும்பாலும் மகிழ்ச்சி, துக்கம், அமைதி, அதிசயம், பயம், ஆரவாரம், குற்ற உணர்வு போன்ற பல வலுவான உணர்வுகளை உள்ளடக்கியது. ஆனால் உணர்வுபூர்வமாக தேவனை ஆராதனை செய்வதற்கும், ஆராதனை எனக்கு என்ன உணர்ச்சிகளைத் தருகிறது என்று தேடுவதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆராதித்தால் தான் கவலைகள் மறந்து ஒரு மன அமைதி ஏற்படுகிறது என்றெல்லாம் சொல்வது மையத்தை மறந்ததை வெளிப்படுத்துகிறது.
எனவே வழிபாடு வறண்டதாகவோ அல்லது சலிப்பாகவோ இருக்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஆனால் சில குறிப்பிட்ட உணர்வுகளைத் தேடி, அவற்றைக் கண்டுபிடிப்பதற்காக ஆராதிக்கப் போகிறேன் என்று சொல்வதைத் தான் தவறு என்று நாம் சொல்கிறோம்.
சரியான கேள்வியைக் கேட்போம்.
“இன்றைய ஆராதனை எனக்குப் பிடித்திருக்கிறதா?” என்ற கேள்விக்கு பதிலாக, “இன்று தேவன் யார் என்று நான் பார்த்தேனா? வெளிப்படுத்தப்பட்ட அந்த சத்தியத்திற்கு உண்மையுடனும் முழு இதயத்துடனும் பதிலளித்தேனா? இன்று நான் என்னையே அவரிடம் ஒப்படைத்துவிட்டேனா?” என்று கேட்பதே சிறந்தது!
ஆராதனையால் நமக்கு என்ன கிடைக்கிறது என்று தேடுவதைத் தவிர்த்து நம் உணர்வுகளை வழிபடுவதைத் தவிர்ப்போம்.
தேவனை மையப்படுத்தும், அவரின் குணாதிசயங்களை வெளிப்படுத்தி, நம்மை அவருக்குப் பணிய வைக்கும் ஆராதனைக்குத் திரும்புவோம். அவருக்கே மகிமை உண்டாவதாக.