இன்று கிறிஸ்தவ சமுதாயத்தில் ஒரு விவாதம் எழுந்துள்ளது. “அச்சிடப்பட்ட வேதாகம புத்தகமே திருமறையாகும்; செல்போன்/டேப்லெட் வேதாகம ஆப் உபயோகத்திற்கு உகந்ததல்ல” என ஒரு சிலர் வாதிடுகிறார்கள். புத்தகம் “ஒரிஜினல்”, டிஜிட்டல் வடிவம் “போலி” என்ற நிலைப்பாடும் எடுக்கப்படுகிறது. இந்த விவாதத்தைச் சமநிலையோடு அணுகி, வேதாகமத்தின் உண்மையான மகிமை எதில் இருக்கிறது என்பதை ஆராய்வோம்.
வரலாறு நமக்குச் சொல்வது
முதலில் வரலாற்று உண்மையைப் பார்ப்போம். “ஒரிஜினல்” என்று நாம் கருதும் அச்சிடப்பட்ட புத்தகமே உண்மையில் பல மாற்றங்களைக் கடந்து வந்தது: திருமறையின் வடிவ பரிணாமம்:
• முதலில் தோல்ச்சுருளில் எழுதப்பட்டது
• பின்னர் பாப்பிரஸ் காகிதத்தில் கையெழுத்தாக நகலெடுக்கப்பட்டது
• கி.பி 1454ல் முதன்முதலாக அச்சிடப்பட்டு புத்தகமாக வெளிவந்தது
• இன்று டிஜிட்டல் யுகத்தில் ஆப்பாக கிடைக்கிறது
இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒவ்வொரு காலகட்டத்திலும், தேவனுடைய கிருபையால் அக்கால தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திருமறை மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. இன்று விலைமதிப்பில்லா வேதாகமம் இலவசமாகவே செல்போனில் கிடைப்பது ஆண்டவரின் அருளின் வெளிப்பாடு என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். இதற்கு மேலும் ‘ஒரிஜினல் வேதாகமம்’, ‘போலி வேதாகமம்’ என்று யாராவது சொன்னால், அவர்களிடம் தோல்ச்சுருள் வேதாகமம் ஒன்று வாங்கித் தரக் கேளுங்கள். அதுதான் ‘ஒரிஜினல் வேதாகமம்’.
இரு வடிவங்களின் சிறப்புகள்
அச்சிடப்பட்ட வேதாகமத்தின் நன்மைகள்
அச்சிடப்பட்ட வேதாகமத்திற்கு நிச்சயமாக சில தனித்துவமான நன்மைகள் உள்ளன:
• அச்சிடப்பட்ட வேதாகமத்தில் கவனச்சிதறல்கள் இல்லை. போன் கால் இல்லை, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் இல்லை.
• சமூக வலைதள அறிவிப்புகள் இல்லை.
• வசனத்தில் முழு ஈடுபாடோடு வாசிக்க முடிகிறது.
• சார்ஜ் போடவேண்டிய அவசியமில்லை, Glare இல்லை. வெளிச்சம் மட்டும் இருந்தால் போதும்.
தன் தாய்-தகப்பனின் கைகளால் தொடப்பட்ட, கறைபடிந்த, அடிகோடிடப்பட்ட பழைய வேதாகம புத்தகத்தை ஏந்தும்போது, “இந்த தலைமுறையில் நானும் என் முன்னோர்கள் போல விசுவாசத்தைக் காக்க வேண்டும்” என்ற சபதம் நம் மனதில் ஏற்படுகிறது. விசுவாச பாரம்பரியத்தின் தொடர்ச்சியை உணர வைக்கிறது.
டிஜிட்டல் வேதாகமத்தின் நன்மைகள்
அதே நேரத்தில், டிஜிட்டல் வடிவத்திற்கும் குறிப்பிடத்தக்க நன்மைகள் உள்ளன:
• எங்கும் எப்போதும் கிடைக்கும், பல மொழிபெயர்ப்புகள் ஒரே இடத்தில் கிடைக்கும்.
• இலவசமாக கிடைக்கிறது, ஏழை-பணக்காரர் வேறுபாடின்றி அனைவருக்கும் சென்று சேருகிறது.
• வசனங்களை விரைவாகக் கண்டுபிடிக்க முடிகிறது
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
திருச்சபையில் பயன்படுத்தும்போது
திருச்சபை கூடுகையில் செல்போன் பயன்படுத்துவதில் ஒரு நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. புதிய விசுவாசிகளுக்கோ, வேற்று சமயத்தவர்களுக்கோ இது தவறான செய்தியை அனுப்பலாம். “தேவனை வணங்க வந்து செல்போனில் கவனம் செலுத்துகிறார்கள்” என்ற தோற்றம் ஏற்படலாம். இதை உணர்ந்து செயல்படுவது அவசியம்.
உள்ளார்ந்த அபாயம்
ஆனால் இங்கே ஒரு முக்கியமான உண்மையையும் நினைவில் கொள்ள வேண்டும். புத்தகத்தில் வேதம் வாசிப்பவர்கள் எல்லோரும் ஆவியில் உயர்ந்தவர்கள் இல்லை. நம் பாடலே நமக்கு நினைவூட்டுகிறது:
“பாதை தோறும் வேதம் ஏந்தி
பரிசுத்தன் என்று காட்டுகின்றேன்
வேதம் காட்டும் பாதை செல்ல
உள்ளமே இன்றி வாழ்கின்றேன்”
வடிவத்தை வைத்து ஆவிக்குரிய வளர்ச்சியை அளவிட முடியாது.
உண்மையான கேள்வி
இந்த விவாதத்தின் மையத்தில் உண்மையான கேள்விகள் இவை:
• எவ்வளவு வாசிக்கிறோம்?
• எவ்வளவு நேசிக்கிறோம்?
• வாழ்க்கையில் எவ்வளவு நடைமுறைப்படுத்துகிறோம்?
திருமறையை எதில் வாசிக்கிறோம் என்பதல்ல, எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம்.
ஒரு சமநிலையான அணுகுமுறை
அச்சிடப்பட்ட வேதாகமத்தை விரும்புபவர்களுக்கு: உங்கள் தேர்வு சரியானது. அதன் நன்மைகளை அனுபவியுங்கள். ஆனால் டிஜிட்டல் வடிவத்தைப் பயன்படுத்துபவர்களை “போலி” என்று சொல்லி விமர்சிக்காதீர்கள்.
டிஜிட்டல் வேதாகமத்தை விரும்புபவர்களுக்கு: உங்கள் தேர்வும் முற்றிலும் சரியானது. ஆனால் திருச்சபையிலும் பொது இடங்களிலும் பயன்படுத்தும்போது மற்றவர்களின் உணர்வுகளையும் கருத்தில் கொள்ளுங்கள்.
முடிவுரை: வார்த்தையே வல்லமை
அச்சிடப்பட்ட வேத புத்தகமோ, செல்போன் ஆப்போ – இவை இரண்டும் வெறும் கருவிகளே. உண்மையான வல்லமை தேவனுடைய வார்த்தையில் இருக்கிறது, அதன் வெளிப்புற வடிவத்தில் அல்ல. அந்த பரிசுத்த வார்த்தைகளை நம் இதயத்தில் பதித்து, வாழ்க்கையில் கடைப்பிடிப்பது. தேவனுடைய வார்த்தை எந்த ரூபத்தில் இருந்தாலும் “உயிருள்ளதும் வல்லமையுள்ளதுமாக” இருக்கிறது. விவாதத்தில் வெற்றி பெறுவதைவிட, வார்த்தையின் மூலம் வாழ்க்கை மாற்றம் பெறுவதே நம் இலக்காக இருக்கட்டும். வடிவத்தைச் பற்றி பேசி பிரிவினை ஏற்படுத்தாமல், வசனத்தை பற்றி ஆழமாய் பேசி ஐக்கியம் வளர்ப்போம்..