தேவனுடைய ஏழு ஆவிகள்

வெளிப்படுத்தின விசேஷத்தின் பக்கங்களைப் புரட்டும்போது, ஒரு மாபெரும் புதிரின் முடிச்சுகளை அவிழ்ப்பது போன்ற உணர்வு எழுவது இயல்பு. 

சர்ப்பங்கள், மிருகங்கள், முத்திரைகள் என நம் கற்பனைக்கு சவால்விடும் அடையாளங்களின் மத்தியில் நம்மை நிறுத்தி சிந்திக்க வைக்கும் ஒரு சொற்றொடர்: “தேவனுடைய ஏழு ஆவிகள்.”

சர்தை பட்டணத்தின் சபைக்கு இயேசு எழுதும்போது தம்மை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்: “தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர்.” (வெளி. 3:1)

இதைக் கேட்டவுடன் கேள்விகள் எழுகின்றன. தேவனுக்கு உண்மையில் ஏழு தனித்தனி ஆவிகள் உண்டா? அவை தூதர்களா? அல்லது இது நாம் இன்னும் புரிந்துகொள்ளாத ஆழமான சத்தியத்தின் குறியீடா?

 “ஏழு ஆவிகள்” என்பது பரிசுத்த ஆவியானவரின் தெய்வீக பரிபூரணத்தைக் குறிக்கும் ஒரு தெய்வீக உருவகம்

சுருக்கமாகச் சொன்னால்  “ஏழு ஆவிகள்” என்பது பரிசுத்த ஆவியானவரின் தெய்வீக பரிபூரணத்தைக் குறிக்கும் ஒரு தெய்வீக உருவகம். அவை ஏழு தனி ஆவிகள் அல்ல. இதை வேதாகமத்தின் ஒளியில் தெளிவாகக் காணலாம்.

1. ஏழு: பரிபூரணத்தின் குறியீடு

‘ஏழு’ என்ற எண்ணின் அர்த்தம் வெளிப்பாட்டில் முக்கியம். இது வெறும் எண்ணல்ல, மாறாக இது தெய்வீக தன்மையை காட்டுகிறது விளங்குகிறது. ஏழு என்பது பரிபூரணம், நிறைவு, மற்றும் தெய்வீக பரிபூரணத்தன்மை என்பதைக் குறிக்கிறது.

இதன் அடிப்படையில் “ஏழு ஆவிகள்” என்பது பரிசுத்த ஆவியானவரின் பரிபூரண தன்மை, வல்லமை மற்றும் கிரியையின் முழுமை என்பதைக் குறிக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். இதற்கு வேறு வேதாகம ஆதாரங்களும்உள்ளன.

2. கடவுளாக வணங்கப்படும் “ஏழு ஆவிகள்”

“ஏழு ஆவிகள்” என்பது பரிசுத்த ஆவியானவரைச் சுட்டுவிக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் முக்கிய வசனம் வெளிப்பாடு 1:4–5 ஆகும்:

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும் (பிதாவாகிய தேவன்), அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், இயேசு கிறிஸ்துவினாலும் (குமாரனாகிய தேவன்),
உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

பிதாவும், குமாரனும் கடவுளாக வணங்கப்படும் இடத்தில் “ஏழு ஆவிகள்”  அவர்களோடு வணங்கப்படுகின்றன.

இங்கு பிதாவும், குமாரனும் கடவுளாக வணங்கப்படும் இடத்தில் “ஏழு ஆவிகள்”  அவர்களோடு வணங்கப்படுகின்றன. இந்த இடத்தில் ஒரு படைக்கப்பட்ட தூதரையோ அல்லது வேறு ஒரு ஆவியையோ  வைப்பது சாத்தியமில்லை.
எனவே, இங்கே கூறப்படும் “ஏழு ஆவிகள்” திரித்துவத்தின் மூன்றாம் நபராகிய பரிசுத்த ஆவியானவரே என்பதைக் காட்டுகிறது.

3. பழைய ஏற்பாட்டு தொடர்புகள்

மேலும் யோவான் “ஏழு ஆவிகள்” இந்த உருவகத்தை பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசன புத்தகங்களிலிருந்து எடுத்துரைக்கிறார். 

அ) ஏசாயா விளக்கும் ஆவியானவர் (ஏசா. 11:2)
மேசியாவின் மேல் தங்கவிருக்கும் ஆவியைப் பற்றி ஏசாயா இப்படியாக கூறுகிறார்:
“கர்த்தருடைய ஆவியும், ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியும் அவர்மேல் தங்கியிருக்கும்.”

“கர்த்தருடைய ஆவி” என்ற பெயருடன் ஆறு வகையான ஆவிக்குரிய கிரியைகளையும் சேர்ந்து, பரிசுத்த ஆவியானவரின்  ஏழு பரிபூரண செயல்பாடுகளை விவரிக்கிறார்.

இங்கே “கர்த்தருடைய ஆவி” என்ற பெயருடன் ஆறு வகையான ஆவிக்குரிய கிரியைகளையும் சேர்ந்து, பரிசுத்த ஆவியானவரின்  ஏழு பரிபூரண செயல்பாடுகளை ஏசாயா விவரிக்கிறார்.

ஆ) சகரியாவின் குத்துவிளக்கு தரிசனம் (சக. 4:1–10)
(சக. 4:2–10)

2 நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும் அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது. 
3 அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன். 
4 நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். 
2 நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும் அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது. 
3 அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன். 
4 நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். 
5 என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

சகரியா தீர்க்கதரிசி இங்கு ஏழு அகல்கள் கொண்ட பொன்னால் ஆன குத்துவிளக்கை காண்கிறார். அதன் பொருளை தேவன் இப்படியாக விளக்குகிறார்:

6 அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

சுருக்கமாக சொன்னால் இந்த ஏழு அகல்கள் கொண்ட பொன்னால் ஆன குத்துவிளக்கு என்பது தேவனுடைய ஆவியானவர் என்று பொருள்.

மேலும், அந்த ஏழு விளக்குகள் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிற கர்த்தருடைய ஏழு கண்கள் என்றும் விளக்கப்படுகின்றன (வசனம் 10).
இதன்மூலம், பரிசுத்த ஆவியானவர் எங்கும் நிறைந்து இருப்பதையும் எல்லாவற்றையும் அறிந்திருப்பதையும் வெளிப்படுத்துகிறார்.

யோவான் இவ்விரு உருவகங்களையும் வெளிப்பாட்டில் இணைக்கிறார்:

  • வெளி. 4:5 – சிங்காசனத்திற்கு முன்பாக ஏழு தீபங்கள் எரிகின்றன; அவை தேவனுடைய ஏழு ஆவிகளே.
  • வெளி. 5:6 – ஆட்டுக்குட்டிக்கு ஏழு கண்கள் உண்டு; அவை பூமியெங்கும் அனுப்பப்பட்ட தேவனுடைய ஏழு ஆவிகளே.

இதன்மூலம், பரிசுத்த ஆவியானவர் எங்கும் நிறைந்து, எல்லாவற்றையும் அறிந்திருக்கும் தேவ பிரசன்னமாக இருந்து சபைகளை வழிநடத்துகிறார் என்பதை நாம் காணலாம்.

4. செத்த சர்தை சபைக்கு ஜீவனுள்ள தீர்வு

சர்தை சபைக்கு இயேசு கூறுகிறார்:

நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும், செத்தவனாயிருக்கிறாய். (வெளி. 3:1)

அவர்கள் வெளிப்படையாகச் கிரியைகளால் உயிருள்ளவர்களைப் போலத் தெரிந்தாலும், ஆவிக்குரிய ஜீவனில் வெறுமையாகிவிட்டனர். மனித முயற்சிகளும் பாரம்பரியங்களும் அவர்களை உயிரற்ற நிலைக்கு தள்ளின.
அந்த நிலையிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து  தம்மை “தேவனுடைய ஏழு ஆவிகளையும் உடையவர்” என அறிமுகப்படுத்தி, “உங்கள் ஆவிக்குரிய மரணத்திற்கு தீர்வு எனது பரிபூரண ஆவியில் இருக்கிறது. மனித முயற்சி தோற்ற இடத்தில், பரிசுத்த ஆவியின் ஜீவனுள்ள வல்லமை மட்டுமே மீண்டும் உயிரூட்ட முடியும்” என்று கூறுகிறார். 

நமக்கான செய்தி

சர்தை சபைக்காண இந்த செய்தி நமக்கும் பொருந்துகிறது.
நம் ஆவிக்குரிய வாழ்விலும், நம் சபைகளிலும் வெளிப்படையான கிரியைகள் இருந்தாலும் உள்ளான ஆவிக்குரிய ஜீவன் இல்லாத நிலை இருக்கலாம்.  இந்த பிரச்சனைக்கான தீர்வு இன்னும் அதிகமான கிரியைகளும், ஊழியத்திற்காகதிட்டம் தீட்டுவதும், கடின உழைப்பும் அல்ல. மாறாக, தேவனுடைய பரிபூரண ஆவியானவரிடம் நம்மை முழுமையாக அர்ப்பணிப்பதில்தான் இருக்கிறது.

ஆவிக்குரிய ஜீவன் இல்லாத நிலைக்கு தீர்வு, தேவனுடைய பரிபூரண ஆவியானவரிடம் நம்மை முழுமையாக அர்ப்பணிப்பதுதான்!

ஏனெனில் இன்றும் என்றும் மாறாத தேவனுடைய வார்த்தை இதுதான்:
“பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்.”